×

வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் 84 வகை பொருட்கள் அனுப்பி வைப்பு

தர்மபுரி, ஏப்.16: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள நிலையில், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு, வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் 84 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு, நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால், வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (17ம் தேதி) மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 12 ஆயிரத்து 732 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1,805 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 320 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க வங்கியாளர்கள், காப்பீட்டு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் நிலையிலான 150 நுண்பார்வையாளர்கள், தேர்தலில் பணியாற்ற 9,025 வாக்குச்சாவடி அலுவலர்கள், 888 போலீசார் என மொத்தம் 10 ஆயிரத்து 63 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு வாக்குச்சாவடிக்கு 2 பேலட் யூனிட் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 1784, கட்டுப்பாட்டு கருவிகள் 1784 மற்றும் 1934 யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரியப்படுத்தும் விவிபாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 670 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேலூரில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் முன்னிலையில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம், வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பாதுகாப்பு அறையில் இருந்து தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய தாலுகா உதவி தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்ப தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று, வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் முத்திரைகள், பென்சில், பேனா, 14 தாள்கள், மெழுகுவர்த்தி உள்ளிட்ட 84 வகையான பொருட்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அந்தந்த சட்டமன்றத் தொகுதிவாரியாக தாலுகா அலுவலகத்திற்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும், தனியாக பொருட்கள் பிரித்து வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வாக்குச்சாவடிகளில் ஒட்ட வேண்டிய வேட்பாளர் விவரம், வழிகாட்டி தகவல்கள் அடங்கிய போஸ்டர், பாதுகாப்பு அட்டைகள் வரவுள்ளது. இவை முழுமையாக வந்தவுடன், தனித்தனியாக பிரித்து வைக்கப்படும். தேர்தலுக்கு முதல் நாள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சேர்த்து, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் 84 வகை பொருட்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Collector ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்